சிபிஎஸ்இ : 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in, results.cbse.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரிபார்க்கலாம்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள 19 ஆயிரத்து 299 மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அழைக்கப்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இருந்து 17 லட்சத்து 4 ஆயிரத்து 367 மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத பதிவு செய்து இருந்தனர். தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் ஏப்ரல் 4-ந்தேதி வரை 49 நாட்களுக்கு நடந்தது.
தேர்வை 16 லட்சத்து 92 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் எழுதி இருந்தார்கள். அவர்களுக்கான தேர்வு முடிவை தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ. நிர்வாகம் இன்று காலை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை https://www.cbse.gov.in/, http://www.results.nic.in/, https://results.digilocker.gov.in/, https://umang.gov.in என்ற இணையதளங்களில் சென்று மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளலாம்.
பிளஸ்-2 தேர்வு எழுதிய 16 லட்சத்து 92 ஆயிரத்து 794 பேரில், 14 லட்சத்து 96 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்ச்சி சதவீதம் 88.39 ஆகும்.
கடந்த ஆண்டை பொறுத்தவரையில், 16 லட்சத்து 21 ஆயிரத்து 224 பேர் தேர்வு எழுதியதில் 14 லட்சத்து 26 ஆயிரத்து 420 பேர் வெற்றி பெற்றிருந்தனர். அதன் தேர்ச்சி சதவீதம் 87.98 ஆகும். அந்த வகையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 0.41 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களில் மாணவிகள் 91.64 சதவீதமும், மாணவர்கள் 85.70 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர்கள் 100 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 5.94 சதவீதம் அதிகம் வெற்றி அடைந்திருக்கின்றனர்.
தேர்வு முடிவில் 95 சதவீதம் மற்றும் 90 சதவீதத்துக்கு மேல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை எடுத்துக்கொண்டால், 95 சதவீதத்துக்கு மேல் 24 ஆயிரத்து 867 பேரும், 90 சதவீதத்துக்கு மேல் 1 லட்சத்து 11 ஆயிரத்து 544 பேரும் பெற்றுள்ளனர். 95 சதவீதத்துக்கு மேல் எடுத்தவர்கள், ஒட்டுமொத்த தேர்ச்சி பெற்றவர்களில் 1.47 சதவீதம், அதேபோல் 90 சதவீதத்துக்கு மேல் எடுத்தவர்கள் 6.59 சதவீதம் ஆகும்.
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் தேர்ச்சி சதவீதத்தில் 97.39 சதவீதத்துடன் சென்னை மண்டலம் 3-வது இடத்தை பெற்றிருக்கிறது. முதல் இடத்தை 99.60 சதவீதத்துடன் விஜயவாடாவும், 99.32 சதவீதத்துடன் திருவனந்தபுரமும் இருக்கிறது. சென்னை மண்டலத்தில் தமிழ்நாடு வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 80 ஆயிரத்து 218 மாணவ-மாணவிகள் எழுதியதில், 78 ஆயிரத்து 995 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 98.48 ஆகும்.