இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு: தேர்வர்களின் மதிப்பெண் வெளியீடு

போட்டித் தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்களின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை,
அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு (2024) ஜூலை மாதம் 21-ந்தேதி நடந்தது. இந்த தேர்வை 25 ஆயிரத்து 319 பேர் எழுதினார்கள்.
தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் கடந்த மாதம் (மார்ச்) 28-ந்தேதி வெளியானது. தற்காலிக விடைகள் மீது ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அதுகுறித்து இணையவழியில் முறையிட தேர்வர்களுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி முதல் கடந்த 3-ந்தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பெறப்பட்ட ஆட்சேபணைகள் பாடவாரியாக வல்லுனர்கள் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு அவர்கள் பரிந்துரைத்த இறுதி விடைக்குறிப்புகளின் அடிப்படையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
தற்போது பகுதி பி-யில் தமிழ்மொழி வினாக்கள் கொண்ட வினாத்தாளை எழுதிய அனைத்து தேர்வர்களின் மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புகள் www.trb.tn.gov.in ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.