10 பெண் குழந்தைகளுக்கு பிறகு 11-வதாக ஆண் குழந்தை பெற்றெடுத்த தம்பதி - ஆசை நிறைவேறியதால் மகிழ்ச்சி

தம்பதியின் மூத்த மகள் தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அரியானாவைச் சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளி தம்பதி 10 பெண் குழந்தைகளைப் பெற்ற பிறகு, 11-வதாக ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். பதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள பூனாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சஞ்சய் குமார் (38 வயது). இவரது மனைவி சுனிதா (37 வயது). இந்த தம்பதிக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணமானது. இவர்கள் ஆண் குழந்தை வேண்டுமென்று ஆசைப்பட்டனர். ஆனால் முதலாவதாக பெண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து ஆண் குழந்தை ஆசையில் பிள்ளைகளை பெற்றெடுத்தனர். இதில் தம்பதிக்கு 10 பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களது மூத்த மகள் தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். ஆனாலும் ஆண் குழந்தை மீதான ஆசை இந்த தம்பதிக்கு விடவில்லை. இந்த சூழலில் சுனிதா கடந்த ஆண்டு மீண்டும் கர்ப்பமானார்.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சஞ்சய் கூறும்போது, "நாங்கள் நீண்ட காலமாக ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்தாலும், எங்கள் மகள்களிடம் ஒருபோதும் பாகுபாடு காட்டவில்லை. ஆண் குழந்தையை வளர்ப்பது போலவே எங்கள் மகள்களை வளர்த்து வருகிறோம். குறைந்த வருமானம் இருந்தபோதிலும், அனைத்து குழந்தைகளையும் படிக்க வைக்க முயற்சிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஒரு ஆண் குழந்தைக்காகக் காத்திருந்து 11 குழந்தைகளைப் பெற்றெடுப்பது தவறு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






