கொல்கத்தா மருத்துவமனை மீது தாக்குதல்: 19 பேர் கைது


கொல்கத்தா மருத்துவமனை மீது தாக்குதல்: 19 பேர் கைது
x
தினத்தந்தி 16 Aug 2024 2:17 PM IST (Updated: 16 Aug 2024 2:35 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி டாக்டர்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

அந்த பெண் டாக்டரின் 4 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதியாகி இருந்தது. அவரின் அந்தரங்க உறுப்புகள், வாய் உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வடிந்துள்ளது என்றும் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி டாக்டர்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பயிற்சி பெண் டாக்டர் கொலையை கண்டித்து கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர்கள் சிலர் நேற்று நள்ளிரவு அத்துமீறி நுழைந்து மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, நர்சிங் ஸ்டேஷன், மருந்துக் கடை மற்றும் வெளிநோயாளர் பிரிவின் சில பகுதிகளை சேதப்படுத்தினர். மேலும் இந்த தாக்குதலில் போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர். இதையடுத்து இந்த தாக்குதலில் ஈடுபட்ட 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் வரும் 22ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story