20 வருடம் என்பது நீண்ட காலம்; ரொட்டியை திருப்பி போடுங்கள் - லாலு பிரசாத் சூசகம்

இளைஞர்களின் அரசு மற்றும் புதிய பீகாருக்கு, தேஜஸ்வி யாதவின் அரசு மிக அவசியம் என லாலு பிரசாத் பதிவிட்டு உள்ளார்.
பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் சென்று வாக்கு சாவடியில் இன்று வாக்குப்பதிவு செய்து விட்டு திரும்பினார். அவர் குடும்பத்தினருடன் வாக்கை செலுத்தி விட்டு, அதற்கான சான்றாக கை விரலில் உள்ள அழியாத மையை செய்தியாளர்களிடம் காட்டினார்.
இதன்பின்னர், அவர் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ரொட்டியை சட்டியில் திருப்பி போட்டு கொண்டே இருக்க வேண்டும். அப்படி ரொட்டியை திருப்பி போடா விட்டால் கருகி விடும் என பகிர்ந்துள்ளார்.
20 வருடம் என்பது நீண்ட காலம். இளைஞர்களின் அரசு மற்றும் புதிய பீகாருக்கு, தேஜஸ்வி யாதவின் அரசு மிக அவசியம் என அவர் பதிவிட்டு உள்ளார். பீகாரில் முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.






