மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது - ஆயுதங்கள் பறிமுதல்

Image Courtesy : PTI
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இம்பால்,
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் 1½ ஆண்டுகளுக்கும் மேலாக கலவரத்தின் பிடியில் சிக்கியது. அங்கு அண்மையில் 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை பயங்கரவாதிகள் கடத்தி கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதை மீறியும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காக்சிங் மாவட்டத்தில் போலீஸ் நிலையம் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் போலீசார் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அதே போல் கடந்த மாதம் 16-ந்தேதி மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் நேற்று போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.






