77-வது குடியரசு தினம்; டெல்லியில் கடும் குளிரில் ராணுவ அணிவகுப்பு ஒத்திகையில் வீரர்கள்


77-வது குடியரசு தினம்; டெல்லியில் கடும் குளிரில் ராணுவ அணிவகுப்பு ஒத்திகையில் வீரர்கள்
x

வந்தே மாதரம் தொடர்பாக இந்தியா முழுவதும் இன்று முதல் 26-ந்தேதி வரை மத்திய ஆயுத படைகள் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

புதுடெல்லி,

நாட்டின் 77-வது குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் டெல்லி கடமை பாதையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.

இதில், வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டு கால கொண்டாட்டமும் நடைபெறுகிறது. ராணுவத்தின் வலிமை மற்றும் கலாசார பன்முக தன்மையின் வளமை ஆகியவற்றை பறைசாற்றுவதுடன் இந்நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதற்காக இன்று (19-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரை இந்திய ராணுவம், கடற்படை, விமான படை, கடலோர காவல் படை மற்றும் பிற மத்திய ஆயுத படைகள் இணைந்து வந்தே மாதரம் தொடர்பாக இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

இதில், சுதந்திரத்திற்கான மந்திரம் வந்தே மாதரம், வளத்திற்கான மந்திரம் சுயசார்பு இந்தியா என்ற கருத்துருக்களுடன் கூடிய அணிவகுப்பு வாகனங்களையும் இடம்பெற செய்ய திட்டமிடப்பட்டு உள்ளன.

இதனை முன்னிட்டு, ராணுவ வீரர்கள் உள்ளிட்ட இந்திய ஆயுத படைகள் டெல்லி கடமை பாதையில் குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகையில் இன்று காலையில் ஈடுபட்டனர். கடும் குளிருக்கு மத்தியில், பல நாட்களாக இந்த ஒத்திகை நடந்து வருகிறது.

குடியரசு தின விழாவையொட்டி, விமான சாகச நிகழ்ச்சிகள், 2,500 கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ராணுவம், கடற்படை மற்றும் விமான படை என முப்படைகளின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெறும்.

இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

1 More update

Next Story