வாடிக்கையாளர் போல் நடித்து நகைகளை திருடிக்கொண்டு ஓடிய நபர் - மராட்டியத்தில் துணிகரம்

கடைக்காரர் சுதாரிப்பதற்குள் மின்னல் வேகத்தில் அந்த நபர் நகைகளை தூக்கிக்கொண்டு தப்பியோடினார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நார்போலி பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு, கூட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் வாடிக்கையாளர் போல் ஒரு நபர் வந்துள்ளார். நகைகளை பார்வையிடுவது போல் அங்கு நீண்ட நேரமாக உலா வந்த அவர், கடைக்காரரிடம் புதிய டிசைன் நகைகளை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து கடைக்காரர் அந்த நபருக்கு புதிய டிசைன் நகைகள் அடங்கிய ஒரு ட்ரேவை எடுத்து காட்டி, அவற்றின் விலையை பற்றி கூறிக்கொண்டிருந்தார். நகையை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த அந்த நபர், திடீரென நகை ட்ரேவை அப்படியே தூக்கிக் கொண்டு கடையில் இருந்து ஓட்டம் பிடித்தார். கடைக்காரர் சுதாரிப்பதற்குள் மின்னல் வேகத்தில் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
பின்னர் அவரை துரத்திப் பிடிக்க கடைக்காரர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்த நிலையில், கடையின் உரிமையாளர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் கடையில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து நகைகளை திருடிச் சென்ற நபரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கடைக்காரர் கண்முன்னே ஒரு திருடன் நகைகளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






