வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு கூடுதல் பணியாளர்கள்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

வாக்குச்சாவடி அதிகாரிகள் அதிக பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர்.
புதுடெல்லி,
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வாக்குச்சாவடி அதிகாரிகள் அதிக பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர். இதனால் தற்கொலை மற்றும் மரணம் என பலர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு வாக்குச்சாவடி அதிகாரிகள் கூடுதல் பணிச்சுமையில் தவிக்கும் நிலையில், சிறப்பாக பணியாற்றாததற்காக அவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது? என தேர்தல் கமிஷனுக்கு அறிவுறுத்த வலியுறுத்தி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது த.வெ.க. சார்பில் வக்கீல் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார்.
அவர் தனது வாதத்தில் கூறியதாவது:-
வாக்குச்சாவடி அதிகாரிகளாக ஆசிரியர்கள் அல்லது அங்கன்வாடி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிக பணி அழுத்தம் காரணமாக பல வாக்குச்சாவடி அதிகாரிகள் மரணமடைந்து உள்ளனர். மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சரியாக செய்யவில்லை என்றால், அவர்கள் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு தொடர்கின்றனர். எனவே இந்த விவகாரத்தில் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு வக்கீல் சங்கர நாராயணன் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-
தங்கள் வழக்கமான பணிகளுடன், தேர்தல் கமிஷன் வழங்கியிருக்கும் கூடுதல் பணிகளால் துன்பங்களை அனுபவித்து வரும் வாக்குச்சாவடி அதிகாரிகளின் பணிச்சுமையை மாநில அரசுகள் குறைக்க முடியும். இதற்காக கூடுதல் பணியாளர்களை நியமிப்பது குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிசீலிக்க வேண்டும். இதன் மூலம் வேலை நேரத்தை விகிதாச்சாரம் அடிப்படையில் குறைக்க முடியும்.
குறிப்பிட்ட காரணங்களுக்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் இருந்து ஏதேனும் பணியாளர் விலக்கு கோரினால், அத்தகைய கோரிக்கைகளை பரிசீலித்து, அவருக்கு பதிலாக வேறொருவரை நியமிக்கலாம். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற்று வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தேவையான பணியாளர்களை தேர்தல் கமிஷனிடம் ஒப்படைக்க கடமைப்பட்டிருக்கும். எனினும் மேலே விளக்கப்பட்டுள்ளபடி அத்தகைய ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.






