கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
Live Updates
- 13 Sept 2024 12:51 PM IST
நிபந்தனை ஜாமீனில் வெளிவருவது பெரிய சாதனை அல்ல- பாஜக
கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியிருப்பதாவது:- கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. நிபந்தனை ஜாமீன் பெறுவது பெரிய சாதனை கிடையாது. விரைவில் கெஜ்ரிவால் தண்டிக்கப்படுவார். ஜெயலலிதா, லாலு பிரசாத் யாதவ், மது கோடா ஆகியோர் முதல்வராக இருந்த போதே சிறை தண்டனை பெற்று பிறகு ஜாமீனில் வெளிவந்தனர்.
அதன்பிறகு மீண்டும் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றார்கள். இந்த பட்டியலில் கெஜ்ரிவாலும் தற்போது சேர்ந்துள்ளார். இதை கெஜ்ரிவால் மறந்துவிடக்கூடாது. கோர்ட்டு விதித்துள்ள நிபந்தனைகளின் படி கெஜ்ரிவால் முதல் மந்திரியாக தனது கடமையை செய்ய முடியாது. பிறகு எதற்காக அவர் பதவியில் நீடிக்க வேண்டும். உடனடியாக கெஜ்ரிவால் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
- 13 Sept 2024 12:41 PM IST
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- 13 Sept 2024 12:38 PM IST
நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் உடனடியாக தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.
- 13 Sept 2024 12:37 PM IST
ஜாமீனில் வெளியே வரும் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் வருமாறு:
*கெஜ்ரிவால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பிணைத்தொகை செலுத்த வேண்டும்
*டெல்லி கலால்துறை வழக்கு தொடர்பாக கெஜ்ரிவால் கருத்து எதுவும் சொல்லக் கூடாது
* நீதிமன்றம் விதிவிலக்கு அளிக்காத பட்சத்தில் கெஜ்ரிவால் விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும்
*டெல்லி முதல் மந்திரி அலுவலகத்திற்கோ அல்லது தலைமை செயலகத்திற்கோ கெஜ்ரிவால் செல்லக் கூடாது. அதிகாரப்பூர்வ கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது.