நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு


நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு
x

கோப்புப்படம்

நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று (செவ்வாய் கிழமை) வேலைநிறுத்த போராட்டம் நடத்துகின்றனர்.

புதுடெல்லி,

வங்கிகளில் 2 மற்றும் 4- வது சனிக்கிழமைகள் விடுமுறையாக உள்ள நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சம்மேளனத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இன்று (செவ்வாய் கிழமை) திட்டமிட்டபடி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துகின்றனர். இதில், இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, பிராந்திய கிராம மற்றும் கூட்டுறவு வங்கிகளை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். ஏற்கெனவே சனி, ஞாயிறு மற்றும் குடியரசு தினத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தொடர்ந்து நான்காவது நாளாக இன்று வங்கி ஊழியர்கள் போராட்டம் நடைபெற உள்ளதால், வங்கி சேவை பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.

முன்னதாக இதுதொடர்பாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “எல்.ஐ.சி. நிறுவனத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை வழங்கிய மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது. மேலும், வங்கி ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, வேலை நேரத்தை முறைப்படுத்துதல், ஓய்வூதியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றுவதாக கடந்த 2024-ம் ஆண்டு இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ.) உறுதி அளித்தது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட போராட்டம், அரசின் உறுதிமொழியை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அரசுடன் எந்த முன்னேற்றமும் இல்லாததால், ஜனவரி 27-ந்தேதி (இன்று) ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1 More update

Next Story