நேருவை தொடர்ந்து காந்தியை வெறுக்க தொடங்கியுள்ளது பாஜக: காங்கிரஸ் விமர்சனம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றுவது குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட'த்தை விரிவுபடுத்தி 'புஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்'என மத்திய பாஜக அரசு பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: -" திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் பெயர் மாற்றுவதில் பிரதமர் மோடியின் அரசு நிபுணத்துவம் பெற்றது. அவர்களை யாராலும் மிஞ்ச முடியாது.
அவர்கள் நிர்மல் பாரத் அபியானை, ஸ்வச் பாரத் அபியான் என்றும், கிராமப்புற எல்பிஜி விநியோகத் திட்டத்தை உஜ்வாலா என்றும் பெயர் மாற்றினார்கள். அவர்கள் திட்டங்களை வடிவமைப்பதிலும் விளம்பரப்படுத்துவதிலும் பெயர்களை மாற்றுவதிலும் வல்லுநர்கள். ஆச்சரியப்படும் விதமாக, பண்டிட் நேருவை வெறுப்பது போலவே மகாத்மா காந்தியையும் வெறுப்பதாகத் தெரிகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2005 முதல் நடைமுறையில் உள்ளது. இப்போது அதன் பெயரை மாற்றுகிறார்கள். மகாத்மா காந்தி என்ற பெயரில் என்ன தவறு இருக்கிறது " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.






