டெல்லி முதல்-மந்திரியை கொல்ல சதி திட்டம்; 2 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு

டெல்லி முதல்-மந்திரி மீது தாக்குதல் நடந்த வழக்கு தொடர்பாக டிஸ் ஹஜாரி கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது.
புதுடெல்லி,
டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரி ரேகா குப்தா கடந்த ஆகஸ்டு மத்தியில், டெல்லியில் மழை பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அதனுடன், வெள்ளத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார். மக்களுக்கு ஆதரவாக பல விஷயங்களில் ஈடுபட்டார்.
இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி ரேகா கடந்த ஆகஸ்டு 20-ந்தேதி காலையில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வில் பங்கேற்றார். அப்போது, 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவரை திடீரென தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரிடம் சில ஆவணங்களை கொடுப்பது போன்று கொடுத்து விட்டு, திடீரென அவரை தாக்கினார். இதில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்து தேறினார்.
இதில், முக்கிய குற்றவாளியான ராஜேஷ் பாய் கிம்ஜி பாய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் ரிக்சா ஓட்டி வருகிறார். அவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். போலீஸ் காவலில் உள்ள அவரிடம் புலனாய்வு துறையினர் மற்றும் சிறப்பு படை பிரிவினரும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டிஸ் ஹஜாரி கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது ராஜேஷ் பாய் கிம்ஜி பாய் மற்றும் சையது தஹ்சின் ரசா ஆகிய இரு குற்றவாளிகள் மீதும் குற்ற சதி திட்டம், கொலை முயற்சி, அரசு ஊழியரை முடக்குதல், அரசு ஊழியர் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளை கோர்ட்டு பதிவு செய்தது.
ஒரு பெண்ணான டெல்லி முதல்-மந்திரியை கொல்லும் நோக்கத்தில் குற்றவாளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என கோர்ட்டு தெரிவித்தது. டெல்லி முதல்-மந்திரியை கீழே தள்ளி விட்டும், கொலை செய்யும் எண்ணத்தில் குரல்வளையை நெரித்துள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.






