டெல்லியில் அடல் கேண்டீன்களில் அலைமோதும் கூட்டம்

டெல்லியில் அடல் கேண்டின்களின் செயல்பாடு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
புதுடெல்லி,
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்த நாளையொட்டி டெல்லி அரசு மலிவு விலையில் சத்தான உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. இதற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி 101 அடல் உணவகங்களை தொடங்கி அதில் ரூ.5-க்கு உணவு வழங்கப்படுகிறது.
முதல்கட்டமாக கடந்த 25-ம் தேதி ஆர்.கே.புரம், ஜங்புரா, ஷாலிமார் பாக், கிரேட்டர் கைலாஷ் உள்ளிட்ட 45 இடங்களில் அடல் கேண்டீன்கள் திறக்கப்பட்டது. மொத்தம் 100 இடங்களில் இதனை திறக்க திட்டமிட்டு உள்ளனர். மீதமுள்ள 55 இடங்கள் 15 நாட்களுக்குள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கேண்டீன்களில் 5 ரூபாய்க்கு 600 கிராமுக்கு உணவு கிடைக்கும். அதாவது 4 ரொட்டிகள், சாதம், பருப்பு குழம்பு, ஒரு காய்கறி கூட்டு மற்றும் ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த கேண்டீன்கள் இயங்கும்.
இந்த கேண்டின்களின் செயல்பாடு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கேண்டீன்களுக்கு படை எடுத்தனர். 45 கேண்டீன்களிலும் கூட்டம் அலைமோதியது.
உணவு விநியோகத்திற்கு டிஜிட்டல் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லி நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் டிஜிட்டல் தளம் மூலம் அனைத்து மையங்களையும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.






