ரெயில் பெட்டியில் பயணிக்கு உணவு கொடுக்க போய்... டெலிவரி ஊழியருக்கு நேர்ந்த கதி; அதிர்ச்சி வீடியோ

ரெயில் அடிக்கடி காலதாமதத்துடன் வருவதும், ஆனால், ரெயில் நிலையங்களில் குறுகிய நேரம் மட்டுமே நிற்கிறது என்றும் பலரும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
அமராவதி,
ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் ரெயில் நிலையத்தில் பிரசாந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியில் உள்ள பயணிக்கு உணவு கொடுப்பதற்காக ஸ்விக்கி நிறுவன டெலிவரி ஊழியர் சென்றுள்ளார். இந்நிலையில், ரெயில் புறப்பட தொடங்கியுள்ளது.
இதனால், அவர் கீழே இறங்க முயற்சிக்கும்போது தவறி நடைமேடையில் விழுகிறார். இதில், அவருக்கு பலத்த அடி விழுகிறது. எனினும், அந்த ஊழியர் சில வினாடிகளில் எழுந்து செல்கிறார். இந்த வீடியோவை மற்றொரு பயணி படம் பிடித்து பகிர்ந்துள்ளார்.
அதில், ரெயில் ஓரிரு நிமிடங்கள் நின்று விட்டு கிளம்பும்போது, ஸ்விக்கி நிறுவனத்தின் டெலிவரி செய்யும் ஊழியர் தவறி விழுந்து இருக்கிறார். அவர் உயிரிழந்து இருக்க கூடும் என வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரெயில் அடிக்கடி காலதாமதத்துடன் வருவதும், ஆனால், ரெயில் நிலையங்களில் குறுகிய நேரம் மட்டுமே நிற்கிறது என்றும் பலரும் ஆதங்கம் தெரிவித்து உள்ளனர்.
இதுபோன்ற ஆபத்து தரும் செயல்களை டெலிவரி ஊழியர்கள் செய்ய வேண்டும் என ஏன் எதிர்பார்க்கின்றனர்? என சிலர் கேள்வி எழுப்பியதுடன், ரெயில் பெட்டியின் வாசலுக்கு பயணிகள் வந்து உணவை வாங்கி செல்ல வேண்டும். அவர்கள் வந்து கொடுப்பார்கள் என சீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு இருக்க கூடாது என கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதில், ஏ.சி. பெட்டியானது, இருக்கை வசதி கொண்ட மற்றும் படுக்கை வசதி கொண்ட மற்ற வகுப்பு பெட்டிகளை போன்று ஜன்னல் வழியே உணவு பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாத சூழல் கொண்டது என்பது கவனிக்கத்தக்கது. இதனால், ரெயில் ஓரிரு நிமிடங்கள் நிற்கும் சூழலில், இதுபோன்ற விசயங்கள் ஆபத்து ஏற்படுத்துகின்றன.
இந்த சம்பவத்தில், ஸ்விக்கி ஊழியர் பாதுகாப்புடன் இருக்கிறார் என்றும் அவருக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் அந்நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.






