ரீல்சுக்காக சிமெண்ட் சுமந்த டாக்டர்; அடுத்து நடந்த விபரீதம்... வைரலான வீடியோ

டாக்டர் பிரவுல்லா, தொழிலாளர்களுடன் சேர்ந்து கோவில் திருப்பணியில் ஈடுபட்டார்.
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் சித்ரகுப்தர் கோவில் உள்ளது. இதனை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவராக டாக்டர் பிரவுல்லா ஸ்ரீவஸ்தவா என்பவர் இருந்து வருகிறார். சமூக பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்நிலையில், கோவில் புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது வந்த டாக்டர் பிரவுல்லா, தொழிலாளர்களுடன் சேர்ந்து கோவில் திருப்பணியில் ஈடுபட்டார். அப்போது, திடீரென 6 அடி ஆழ குழிக்குள் தவறி விழுந்து விட்டார். இதனால், சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவத்தின்போது, அவர் குழிக்குள் சிமெண்டை கொட்டினார். ஆனால், அதனை புகைப்படம் எடுத்தவர், படம் சரியாக வரவில்லை. அதனால், மீண்டும் அப்படி செய்யுங்கள் என கூறியிருக்கிறார். இதனால், மற்றொரு முறை சிமெண்டை வாங்கி குழிக்குள் கொட்ட முற்பட்டார். அப்போது, அவர் நின்றிருந்த பகுதியில் இருந்த மண் குழிக்குள் சரிந்தது. அதனுடன் சேர்ந்து அவரும் குழிக்குள் சரிந்து விட்டார். கூட இருந்த தொழிலாளி அவரை பிடிக்க போனார். ஆனால், அதற்குள் அவர் குழியில் விழுந்து விட்டார்.
இதனால் என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் அந்த தொழிலாளி அதிர்ச்சியில் நின்று விட்டார். இப்போது, அது மற்றொரு நபரின் மொபைல் போனில் வீடியோவாக பதிவாகி இருந்தது. அது வைரலாகி விட்டது.
இந்த சம்பவத்தில், அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் மீட்கப்பட்டார். டாக்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரீல்ஸ் எடுப்பதற்காக அவர் நின்றிருந்த மண் பகுதி சரியாக இல்லாமல் போனது, அவருக்கு பாதகம் ஏற்படுத்தி விட்டது.






