ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் ரூ.192 கோடி முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை


ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் ரூ.192 கோடி முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
x

ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.

புதுடெல்லி,

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்தநிலையில், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமலாக்கத்துறையின் மண்டல அலுவலக அதிகாரிகள், 'வின்சோ' என்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் தணிக்கை நிறுவனத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது, வின்சோ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘எம்.எஸ் இசட்.ஓ கேம்ஸ்' நிறுவனத்தின் ரூ.192 கோடியை அதிகாரிகள் முடக்கினர். இதில் வங்கி இருப்பு, வைப்பு நிதி மற்றும் பரஸ்பர நிதி ஆகியவை அடங்கும். சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

வின்சோ செயலியில் பணம் கட்டி விளையாடும் வாடிக்கையாளர்கள், மற்றொரு மனிதருடன் விளையாடுவதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மையில், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மென்பொருள்களுக்கு எதிராகவே அவர்களை விளையாட வைத்ததாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கும் நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மோசடிகள் மூலம் இதுவரை அந்த நிறுவனம் சுமார் ரூ.802 கோடி வரை சட்டவிரோதமாக ஈட்டியுள்ளதாக அமலாக்கத்துறை மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் ஈட்டிய கோடிக்கணக்கான ரூபாயை, வெளிநாட்டு முதலீடு என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூருக்குத் திருட்டுத்தனமாக அனுப்பியதும் அம்பலமாகியுள்ளது.

மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுக்களுக்குத் தடை விதித்த பிறகும், சுமார் ரூ.43 கோடி மதிப்பிலான வாடிக்கையாளர் பணத்தைத் திருப்பித் தராமல் நிறுவனம் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story