நாடு கடத்தப்படுவோம் என அச்சம்... எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவம் வழங்காததால் மகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்

வாக்குச்சாவடி அதிகாரிகள், இளம்பெண்ணுக்கு கணக்கீட்டுப்படிவம் வழங்காததால் அவர் தீவிர மனஉளைச்சலுக்கு ஆளானார்.
கொல்கத்தா,
தமிழகம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது. இதற்காக வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடுதோறும் சென்று கணக்கீட்டு படிவம் வழங்கி விவரங்களை சேகரித்து வருகின்றனர். அந்தவகையில் மேற்கு வங்காளத்திலும் இந்த பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
அங்குள்ள ஹூக்ளி மாவட்டத்தின் தனியாகாலி பகுதியில் சமீபத்தில் வாக்குச்சாவடி அதிகாரிகள் இந்த பணிகளை மேற்கொண்டனர். அந்த பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து தனது தாய் வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறார். தனது மகளையும் அவருடனே வைத்திருந்தார்.
அவர்களது வீட்டுக்கு சென்ற வாக்குச்சாவடி அதிகாரிகள், அந்த இளம்பெண்ணுக்கு கணக்கீட்டுப்படிவம் வழங்கவில்லை. அவரைத்தவிர குடும்பத்தினர் அனைவருக்கும் படிவம் வழங்கி விவரங்களை சேகரித்தனர். இதனால் அந்த இளம்பெண் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார். தன்னையும், தனது மகளையும் தடுப்புக்காவல் மையங்களுக்கு மாற்றி விடுவார்களோ? அல்லது நாடு கடத்துவார்களோ? என்று குடும்பத்தினரிடம் கூறியவாறே இருந்தார்.
இவ்வாறு கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த அவர் நேற்று முன்தினம் திடீரென தனது மகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கிய அவர்கள் இருவரையும் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குடும்பத்தினர் அனுமதித்து உள்ளனர். அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் இருவரின் உடல்நிலையும் மோசமான நிலையில் இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் இளம்பெண் ஒருவர் மகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.






