ராஜஸ்தானில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து
ராஜஸ்தானில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் ரெயில் நிலையத்தில் இருந்து ரேவாரி ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மதுரா அருகே இன்று காலை 2.30 மணிக்கு தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் சரக்கு ரெயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டன.
இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று தடம்புரண்ட ரெயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ஆல்வார்-மதுரா வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என ஜெய்ப்பூர் கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் உத்தர பிரதேச மாநிலத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் சரக்கு ரெயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. அதற்கு முன்பு கடந்த 18-ந்தேதி, உத்தர பிரதேசத்தின் கோண்டா ரெயில் நிலையம் அருகே சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.