இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்; ஜவுளி துறையில் ரூ.3.66 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி உயரும்: மத்திய மந்திரி தகவல்

தொழிலாளர் விரிவாக்க துறையில், 60 முதல் 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக கூடும் என மத்திய வர்த்தக மந்திரி கூறினார்.
புதுடெல்லி,
டெல்லியில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தங்களுடைய குழுவினருடன் இன்று மதியம் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை முக்கிய இடம் பெற்றது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. இந்த நிலையில், ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என பெயரிடப்பட்ட, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, வெளிப்படையான இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டு, இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாக இணைந்து இன்று அறிவித்தது.
ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகிய இருவர் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் முடிவானது.
இந்த ஒப்பந்தம் இறுதியான பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல், தொழிலாளர் விரிவாக்க துறையில் இதனால் 60 முதல் 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக கூடும் என்றார்.
அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது, வளர்ச்சி குறைந்த நாடு என்ற அடிப்படையில் வங்காளதேசத்திற்கு வரி விதிப்பு இல்லை. அதனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் 250 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஜவுளி வர்த்தகத்தில், வங்காளதேசம் 30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகம் மேற்கொள்கிறது. அதனை அந்நாடு தன்வசம் பிடித்து வைத்து கொண்டது. ஜவுளி ஏற்றுமதியும் செய்கிறது என்றார்.
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பின்னர், 7 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதில் இருந்து 30 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 40 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.3 லட்சத்து 66 ஆயிரம் கோடி) என்ற அளவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி அடையும் என அவர் கூறினார்.






