இந்தியாவில் யு.பி.ஐ. மூலம் 85 சதவீத டிஜிட்டல் பணப் பரிமாற்றம் - ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்

ஒவ்வொரு மாதமும் யு.பி.ஐ.யை பயன்படுத்தி சுமார் 2 ஆயிரம் கோடி பரிமாற்றங்கள் நடக்கின்றன என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் வருடாந்திர கூட்டங்களில் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கலந்து கொண்டார்.
அங்கு ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்த ‘டிஜிட்டல் பொது தளங்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கிலும் சஞ்சய் மல்ஹோத்ரா பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-
யு.பி.ஐ. என்பது முக்கியமான டிஜிட்டல் பொது தளம். பண பரிமாற்ற முறையையே யு.பி.ஐ. மாற்றி அமைத்துள்ளது. ஒரு வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக்கணக்குக்கு விரைவாக பணத்தை மாற்ற முடிகிறது.
இந்தியாவில் நடக்கும் டிஜிட்டல் பண பரிமாற்றங்களில் 85 சதவீத பரிமாற்றங்கள், யு.பி.ஐ. மூலம்தான் நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் யு.பி.ஐ.யை பயன்படுத்தி சுமார் 2 ஆயிரம் கோடி பரிமாற்றங்கள் நடக்கின்றன. அவற்றின் மதிப்பு 28 ஆயிரம் கோடி டாலர் (ரூ.24 லட்சத்து 64 ஆயிரம் கோடி) ஆகும்.
பாதுகாப்பான பண பரிமாற்றத்துக்கு இந்தியாவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
சிறு வியாபாரிகள் மற்றும் சிறிய நிறுவனங்களும் டிஜிட்டல் முறையில் பணத்தை பெறலாம். அதன்மூலம் நிதி வரலாற்றை உருவாக்கி, குறைந்த வட்டியில் கடன் பெறலாம். ‘உலகமே ஒரு குடும்பம்’ என்ற வசுதைவ குடும்பகம் தத்துவத்தில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.
ஆகவே, டிஜிட்டல் பொது தளங்களின் பலன்கள் உலகம் முழுவதும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதுதொடர்பான சர்வதேச ஒத்துழைப்புக்கு தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.






