‘நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது’ - நிர்மலா சீதாராமன்


‘நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது’ - நிர்மலா சீதாராமன்
x

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை குற்றவாளிகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

மும்பை,

மும்பையில் 6-வது சர்வதேச நிதி தொழில்நுட்ப மாநாடு தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டில் நாளை(வியாழக்கிழமை) பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.

இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நிதி தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஏ.ஐ. தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

“நிதி மற்றும் நிர்வாகத்துறையை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மாற்றியமைத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தில் இருண்ட பக்கங்களும் உள்ளன. ஏ.ஐ. தொழில்நுட்பம் அசாதாரணமான வாய்ப்புகளை தந்துள்ளது. இருப்பினும் அதன் இருண்ட பக்கங்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

புதுமைக்கு சக்தி அளிக்கும் அதே கருவிகளை குற்றவாளிகள் மோசடி வேலைகளுக்கு ஆயுதமாக பயன்படுத்தலாம். எனது டீப்பேக் வீடியோக்ககள் கூட ஆன்லைனில் உலாவ விடப்பட்டு இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். உண்மைகளை திரித்து மக்களை தவறாக வழிநடத்தி மோசடிகள் செய்யப்படுகின்றன. நமது பாதுகாப்பை நாம் எவ்வாறு அவசரமாக வலுப்படுத்த வேண்டும் என்பதை இது நினைவூட்டுவதாக உள்ளது.

புதிய தலைமுறை மோசடி என்பது நம்பிக்கையை உடைத்து ஏமாற்றுவதாக உள்ளது. மோசடிக்காக ஏ.ஐ. மூலம் குரல் மோசடி, முக அடையாள மோசடி மற்றும் உண்மையான நபரை போல போலி வீடியோக்களை உருவாக்குவது போன்ற செயல்களில் குற்றவாளிகள் ஈடுபடுகிறார்கள். எனவே நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏ.ஐ. தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உலக அளவில் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் எண்ணிக்கையில் இந்தியா தற்போது 3-வது இடத்தில் உள்ளது. மேலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் முன்னிலையில் உள்ளது. இந்திய மொழிகள், உள்ளூர் சூழல்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை வேரூன்ற செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் அந்த தொழில்நுட்பத்தை மக்கள் எளிதில் அணுக முடியும்.”

இவ்வாறு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

1 More update

Next Story