மோடி பதவியேற்பு விழா: அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு


Narendra Modi
x
தினத்தந்தி 6 Jun 2024 1:39 PM IST (Updated: 6 Jun 2024 3:43 PM IST)
t-max-icont-min-icon

மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா 8ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டன. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின.

இதையடுத்து, நேற்று பிரதமர் மோடி ஜனாதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்து மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த தீர்மானத்தை அளித்தார். மேலும் தனது பதவி மற்றும் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் மோடி வழங்கினார். இதனை தொடர்ந்து, அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 17வது மக்களவையை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கலைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, மத்தியில் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க. தொடங்கியது. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா வருகிற 8-ம் தேதி மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவிற்கு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேபாளம், பூடான், இலங்கை, வங்கதேசம் மற்றும் மொரீஷியஸ் தலைவர்கள் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, 3வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரை பதவியேற்பு விழாவிற்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.

அதேபோல, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அதை அவர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தாவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி, முறையான அழைப்பிதழ்கள் அனுப்பப்படும் என்று கூறி அழைப்பு விடுத்தார். மேலும் பூடான் பிரதமர், மொரீஷியஸ் அதிபருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்பதன் மூலம், கடந்த 1962-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஆளும் அரசு 3-வது முறையாக ஆட்சிக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story