கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

முகமூடி திருடர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அத்திப்பாளி பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 73). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்து 2 பேர் விஜயலட்சுமியின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவரின் செல்போனை கேட்டனர். அப்போது முகமூடி அணிந்து வந்த நீங்கள் யார்? என்று விஜயலட்சுமி கேட்டார்.
இதைத்தொடர்ந்து அவர்கள், மூதாட்டியிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றனர். மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் விஜயலட்சுமியின் கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்தனர். அப்போது விஜயலட்சுமி நகையின் ஒரு பகுதியை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இதனால் கிடைத்தது வரை லாபம் என மீதமுள்ள 2½ பவுன் நகையை பறித்துக்கொண்டு முகமூடி திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி சத்தம் போட்டார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால், முகமூடி திருடர்கள் காரில் தப்பி சென்றனர். இதுகுறித்து கூடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தகுமார், இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் கவியரசன், மகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முகமூடி திருடர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் 1-ம் மைல் பகுதியில் உள்ள காய்கறி கடையில் பட்டப்பகலில் ரூ.1 லட்சத்தை கொள்ளையர்கள் திருடி சென்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, திருட்டு சம்பவங்களில் வெளி நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. விரைவில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.






