3 லட்சம் லட்சாதிபதி மகளிர் என்ற இலக்கை நோக்கி பயணம்: சிவராஜ் சிங் சவுகான் பேச்சு

சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிர் அனைவரும் வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டுகால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அதனை ஒன்றாக பாடினர்.
புதுடெல்லி,
டெல்லியில் மத்திய கிராமப்புற வளர்ச்சி, வேளாண் மற்றும் விவசாயிகளின் நலன்கள் துறைக்கான மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மகளிரை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களின் தலைவிகள், லட்சாதிபதி மகளிர் 400 பேர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் அனைவரும் வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டுகால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அதனை ஒன்றாக பாடினர். நிகழ்ச்சியில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான், குடியரசு தினம் என்பது மக்கள் மற்றும் சுய உதவி குழுக்களின் லட்சாதிபதி மகளிரின் உத்வேக பயணத்திற்கான கொண்டாட்டம் ஆகும் என்றார்.
நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுக்களின் மகளிரை வரவேற்கிறேன் என்றும் பிற மகளிருக்கு அதிகாரமளிக்கும் அவர்களுடைய நம்பிக்கை, தலைமையை மற்றும் முயற்சிகளை பாராட்டுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் லட்சாதிபதி மகளிர் எண்ணிக்கையானது 2 லட்சத்தில் இருந்து 3 லட்சம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது என்றும் அவர் கூறினார்.






