கேரளா: ஊழியரை நாய் போல் நடக்க செய்த நிறுவனம்; வைரலான வீடியோ - உண்மை என்ன?


கேரளா:  ஊழியரை நாய் போல் நடக்க செய்த நிறுவனம்; வைரலான வீடியோ - உண்மை என்ன?
x

கேரளாவில் தனியார் நிறுவனத்தில், விற்பனை இலக்குகளை அடையவில்லை என்பதற்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டது என கூறப்பட்டது.

கொச்சி,

நாட்டில் 100 சதவீதம் கல்வியறிவு கொண்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது கேரளா. இந்நிலையில், கேரளாவின் கொச்சி நகரில் கலூர் அருகே உள்ள பெரும்பாவூர் என்ற இடத்தில் அமைந்த தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களை தவறான முறையில் நடத்தியது போன்ற வீடியோ ஒன்று வைரலானது.

அந்த வீடியோவில், ஊழியரின் கழுத்தில் கயிறு ஒன்றை கட்டி, நாய் போன்று முழங்காலால் நடக்க செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. நிறுவனத்தின் விற்பனை இலக்குகளை அடையவில்லை என்பதற்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டது என கூறப்பட்டது.

சில ஊழியர்களை தரையில் உள்ள நாணயங்களை நாக்கால் தடவி, வாயில் எடுக்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர். அந்த வீடியோவில் ஊழியர்களின் ஆடைகளை களைய செய்யும் அதிர்ச்சி அடைய செய்யும் காட்சிகளும் உள்ளன.

இதுபற்றிய வீடியோ வைரலானதும், கேரள தொழிலாளர் துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. எனினும், அந்த தனியார் நிறுவன ஊழியர்கள் பலரும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என கூறியுள்ளனர். நிறுவனத்தின் மதிப்பை கெடுக்கும் வகையில் வீடியோ பரவ செய்யப்பட்டு உள்ளது என கூறினர்.

போலீசாரும் இது போலியானவை என தெரிவித்தனர். இந்நிலையில், இதன் உண்மை தன்மை பற்றி போலீசார் கூறும்போது, நிறுவன உரிமையாளருடன் முன்னாள் மேலாளருக்கு மோதல் போக்கு இருந்தது.

இதனால், நிறுவனத்திற்கு புதிதாக பயிற்சிக்கு வந்தவர்களை கொண்டு இந்த வீடியோவை அவர் எடுத்துள்ளார். இது பயிற்சியின் ஒரு பகுதி என அவர்களிடம் அவர் கூறியுள்ளார். வீடியோவில் தவழ்ந்து செல்லும் நபரும் போலீசிடம் கூறும்போது, 4 மாதங்களுக்கு முன்பு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். ஊழியர்கள் சிலருடனான தகராறை தீர்த்து கொள்வதற்காக வீடியோவில் நடிக்க ஒத்து கொண்டேன் என்றார். மாவட்ட தொழிலாளர் துறை அதிகாரியிடமும் இதேபோன்றதொரு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

இதுபற்றி புகார் எதுவும் வரவில்லை என போலீசார் தெரிவித்தனர். நிறுவனமும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஊழியர் ஒருவர் கூறும்போது, விற்பனை இலக்கு எதுவும் இல்லை என கூறியதுடன், கமிஷன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

1 More update

Next Story