மொழி வெறுப்பு மாநிலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும்; கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு

மொழி வெறுப்பு மாநிலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் என கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார்.
மும்பை,
மராட்டியத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்கும் வகையில் மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. அரசின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மாநில அரசு இந்தியை தொடக்க பள்ளியில் கட்டாயமாக்கும் உத்தரவை திரும்ப பெற்றது.இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் மொழி வெறுப்பு மாநிலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் என கூறினார்.இது குறித்து அவர் பேசியதாவது:-
அடித்தால் மராத்தி பேச முடியுமா?
மராத்தி பேசவில்லை என்பதால் சிலர் தாக்கப்படுவதாக பத்திரிகை செய்தி மூலம் தெரிந்து கொண்டேன். நீங்கள் என்னை அடிப்பதால்? என்னால் உடனடியாக மராத்தி பேச முடியுமா?. இதுபோன்ற வெறுப்பு நிலவினால் மாநிலத்துக்கு எந்த தொழிற்சாலைகளும், முதலீடும் வராது. இது நீண்டகாலத்துக்கு நம் மாநிலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும். நான் தமிழ்நாட்டில் எம்.பி.யாக இருந்தபோது தமிழ் பேசவில்லை என ஒரு கும்பல் மற்றொரு தரப்பை தாக்கியதை பார்த்தேன்.என்னால் இந்தி புரிந்து கொள்ளமுடியவில்லை. அது எனக்கு தடையாக உள்ளது. நாம் கண்டிப்பாக அதிக மொழிகளை கற்றுக்கொள்வோம். அதே நேரத்தில் நமது தாய் மொழியை நாம் பெருமையாக கருத வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு குறித்து ஆதித்ய தாக்கரே எம்.எல்.ஏ. கூறுகையில், "மாநிலத்தில் மொழி வெறுப்பு இல்லை. அதுகுறித்து அரசியல் கருத்து கூற தேவையில்லை," என்றார்.






