நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை மதிப்புடன் நினைவுகூருவோம்; பிரதமர் மோடி ராணுவ தின வாழ்த்து

நம்முடைய வீரர்கள் சவாலான சூழ்நிலைகளில் நிலையான மனவுறுதியுடன் செயல்பட்டு, நாட்டை பாதுகாக்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாடு காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையான பின்னர் சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய ராணுவ தலைமை தளபதியாக கே.எம். கரியப்பா பொறுப்பேற்று கொண்டார். 1949-ம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி அவர் பதவியேற்றார். இதனை நினைவுகூரும் வகையில் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், 78-வது ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இன்று ராணுவ அணிவகுப்பு நடத்தப்படுகிறது. ஜெகத்புரா பகுதியில் உள்ள, பிரிட்டிஷாரால் ஏற்படுத்தப்பட்ட ராணுவ தளத்திற்கு வெளியே முதன்முறையாக இந்த ராணுவ அணிவகுப்பு நடைபெறுகிறது.
இதனையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில், இந்திய ராணுவத்தின் துணிச்சல் மற்றும் உறுதியான அர்ப்பணிப்புக்கு, ராணுவ தினத்தில், நாம் தலை வணங்குவோம். நம்முடைய வீரர்கள் தன்னலமற்ற சேவையின் அடையாளமாக திகழ்கிறார்கள்.
சவாலான சூழ்நிலைகளில் நிலையான மனவுறுதியுடன் செயல்பட்டு, நாட்டை பாதுகாக்கிறார்கள். அவர்களின் கடமையுணர்வு, நாடு முழுவதும் மக்களிடையே நம்பிக்கை மற்றும் நன்றியுணர்வை தூண்டுகிறது என அவர் தெரிவித்து உள்ளார்.
ராணுவ பணியின்போது, நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை ஆழ்ந்த மதிப்புடன் நாம் நினைவுகூருவோம் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.






