அதானி குழும முதலீட்டில் வெளிநபர்கள் தலையீடா? - எல்.ஐ.சி. அளித்த விளக்கம் என்ன..?

அமெரிக்க பத்திரிகை செய்தி, பொய்யானது, அடிப்படையற்றது, உண்மைக்கு அப்பாற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் முதலீடு செய்த முடிவுக்கு வெளிநபர்கள் தலையீடுதான் காரணம் என்று அமெரிக்க பத்திரிகை வெளியிட்ட செய்திக்கு எல்.ஐ.சி. மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எல்.ஐ.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க பத்திரிகை செய்தி, பொய்யானது, அடிப்படையற்றது, உண்மைக்கு அப்பாற்பட்டது. சுதந்திரமாகவும், நிர்வாக குழு ஒப்புதல் அளித்த கொள்கைகளின்படியும், மிகுந்த கவனத்துடனும் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளோம்.
நாட்டின் முன்னணி 500 நிறுவனங்களில் எங்களது முதலீடு கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, ரூ.1.56 லட்சம் கோடியில் இருந்து ரூ.15.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதானி குழுமம் பெற்ற முதலீடுகளில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் முதலீடு வெறும் 2 சதவீதத்தை விட குறைவு ஆகும். மேலும், அதானி குழுமத்தை விட ரிலையன்ஸ், ஐ.டி.சி., டாடா குழுமம் ஆகியவற்றில்தான் எல்.ஐ.சி. அதிக பங்குகளை வைத்துள்ளது. எல்ஐசி மிக உயர்ந்த தர நிலையைக் கொண்டுள்ளது. அதன் அனைத்து முதலீட்டு முடிவுகளும் தற்போதுள்ள கொள்கைகள், சட்டங்களில் உள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு இணங்க, அதன் அனைத்து பங்குதாரர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படுகின்றன.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி.யின் முதலீட்டு முடிவுகளில் மத்திய அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிடுவது இல்லை என்று எல்.ஐ.சி. முன்னாள் தலைவர் சித்தார்த்த மொஹந்தி கூறியுள்ளார்.
அதுபோல், அதானி குழும உயர் அதிகாரி ஜுகேஷிந்தர் சிங், ‘‘நிதி பற்றி வாஷிங்டன் போஸ்ட் எழுதுவது, தலை நிறைய முடி வளர்ப்பது பற்றி நான் எழுதுவது போன்றது (அவரது தலையில் முடி கிடையாது). அதில் தவறுகள் காணப்படுகின்றன’’ என்று கூறினார்.






