மக்களவையில் மணிப்பூர் ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்


மக்களவையில் மணிப்பூர் ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்
x

மணிப்பூர் ஜி.எஸ்.டி. திருத்த மசோதாவை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவையில் தாக்கல் செய்தார்.

புதுடெல்லி,

பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகிறது. இந்த பிரச்சினையை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இது நேற்றும் நீடித்தது. காலையில் மக்களவை தொடங்கியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்காளர் பட்டியல் பிரச்சினையை முன்வைத்து கோஷமிட்டனர். ஆனால் எதிர்க்கட்சிகள் அவையை நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். பின்னர் அவை மீண்டும் கூடியபோதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியில் நின்று கோஷமிட்டனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கைவிட வேண்டும் எனவும், இது குறித்து அவையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டு போராடினர்.

இந்த அமளிக்கு மத்தியில் மணிப்பூர் ஜி.எஸ்.டி. திருத்த மசோதாவை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவையில் தாக்கல் செய்தார். அவர் பேசும்போது, ‘மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருப்பதால் இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு பதிலாக இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது’ என தெரிவித்தார்.

இந்த சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் ஜி.எஸ்.டி கவுன்சிலால அங்கீகரிக்கப்பட்ட ஜி.எஸ்.டி திருத்தங்களைச் செயல்படுத்துவதில் மாநிலத்திற்கு சிரமம் ஏற்படும் எனக்கூறிய அவர், இதன் மூலம் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும் என்பதால் இது அரசியலமைப்புச் சட்டத்தின் தேவை என்றும் கூறினார்.

அப்போது எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியபோது மணிப்பூர் மாநில ஒதுக்கீட்டு மசோதா 2025-ஐ நிதி மந்திரி தாக்கல் செய்தார். 2025-26-ம் நிதியாண்டின் சேவைகளுக்காக நிதி ஒதுக்குவதற்கு இந்த மசோதா அங்கீகாரம் அளிக்கும்.

இந்த மசோதாக்கள் மீது விவாதம் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவாறே இருந்தனர். பின்னர் குரல் ஓட்டு மூலம் 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் சபையும் நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே மாநிலங்களவை காலையில் கூடியதும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் வழங்கியிருந்த 25 ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்கள் நிராகரிக்கப்படுவதாக அவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அதிருப்தி அடைந்த ஹரிவன்ஷ், எதிர்க்கட்சியின் இந்த அமளியால் மழைக்கால கூட்டத்தொடரில் இதுவரை 51 மணி 30 நிமிடங்கள் வீணாகி விட்டதாக தெரிவித்தார். எனவே அவையை நடத்த ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்க்கட்சியினர் இதற்கு செவிமடுக்காததால், அவையை பிற்பகல் 2 மணி வரை ஹரிவன்ஷ் ஒத்திவைத்தார்.

பிற்பகலில் அவை மீண்டும் கூடியபோது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஆனால் இந்த அமளிக்கு மத்தியிலும் கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா விவாதத்துக்கு எடுக்கப்பட்டது.

அப்போதும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடரவே, எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.அப்போது பேசிய கார்கே, ‘நாடு ஆபத்தான காலத்தை கடந்து கொண்டிருக்கிறது. எனவே அரசும், எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க அரசு அனுமதிக்க வேண்டும். அதன் மூலம் நாட்டு நலனுக்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் செய்ய முடியும்’ என்றார்.

அப்போது பேசிய அவை முன்னவர் ஜே.பி.நட்டா, திட்டமிட்டபடி மசோதாவை விவாதத்துக்கு எடுக்குமாறு அவை துணைத்தலைவரை கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சிகளின் அமளியின் மத்தியில் மசோதா விவாதிக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவை நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.

1 More update

Next Story