ஒரே நாடு ஒரே தேர்தல்.. இந்த ஆட்சிக்காலத்திலேயே நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டம்?


ஒரே நாடு ஒரே தேர்தல்..  இந்த ஆட்சிக்காலத்திலேயே நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டம்?
x
தினத்தந்தி 15 Sep 2024 11:38 AM GMT (Updated: 15 Sep 2024 12:24 PM GMT)

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 18 அரசியலமைப்பு திருத்தங்களை உயர்மட்டக் குழு பரிந்துரைத்தது.

புதுடெல்லி:

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தற்போதைய ஆட்சிக் காலத்திற்குள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்தும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத பிரமுகர் ஒருவர் கூறிய தகவலை மேற்கோள் காட்டி பி.டி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3-வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலும் கூட்டணி கட்சிகளுக்குள் ஒற்றுமை தொடரும் என்றும், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பிரமுகர் கூறியிருக்கிறார். இதன்மூலம் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கடந்த மாதம் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையிலும், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அழுத்தமாக பதிவு செய்தார். ஒரு நாடு, ஒரே தேர்தலை நடத்த முன்வர வேண்டும் என்று அரசியல் கட்சிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய வாக்குறுதிகளில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற வாக்குறுதியும் ஒன்று ஆகும். இதுதொடர்பாக ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஆதரவாக பரிந்துரைகளை வழங்கியது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படுவது அவசியம் என குறிப்பிட்டிருந்தது. இதற்காக 18 அரசியலமைப்பு திருத்தங்களை குழு பரிந்துரைத்தது. அவற்றில் பெரும்பாலானவை மாநில சட்டசபைகளின் ஒப்புதல் பெறத் தேவையில்லை. சில அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் கூறியிருந்தது.

இந்த சீர்திருத்தங்களை செய்தபின், மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்கலாம் என்றும், அது முடிந்த பின்னர் 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story