5 நாள் பயணமாக பிலிப்பைன்ஸ் அதிபர் இந்தியா வருகை

இந்தியாவுக்கு 5 நாள் அரசு முறை பயணமாக வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேச உள்ளார்.
புதுடெல்லி,
பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ரொமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியர் தனது மனைவி, மந்திரிகள் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினருடன் டெல்லிக்கு இன்று வந்தார். 5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த அவரை வெளியுறவுத்துறை இணை மந்திரி பபித்ரா மார்கெரிட்டா வரவேற்றார். விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மற்றும் சிவப்பு கம்பள மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது.
நாளை (செவ்வாய்க்கிழமை) ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் பிலிப்பைன்ஸ் அதிபர், அதன் பின்னர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.
மேலும், இரு நாடுகளின் குழுக்களுக்கு இடையேயான ஆலோசனையும் நடைபெற உள்ளது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் உடனான சந்திப்பை அடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் மத்திய மந்திரிகளையும் மார்கோஸ் சந்தித்து பேச உள்ளார்.
இந்தியா- பிலிப்பைன்ஸ் இடையேயான ராஜ்ய உறவு தொடங்கப்பட்டதன் 75-வது ஆண்டை முன்னிட்டு, பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். இந்த பயணத்தின்போது அவர் பெங்களூருவுக்கும் செல்ல உள்ளார்.






