டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதை ஜனாதிபதி வழங்கினார்.
புதுடெல்லி,
நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 77-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லி கடமைப் பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். ஜனாதிபதி கொடியேற்றியதும் விமானப்படை வானில் ஹெலிகாப்டர்களில் மலர்கள் தூவப்பட்டன. அப்போது, சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இந்திய வீரரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இந்தியாவின் படை வலிமை, பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பு நடந்து வருகிறது. லெப்டினென்ட் ஜெனரல் பாவ்னீஷ் குமார் தலைமையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விமானப்படை சார்பில் 29 விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் ஆண்டோனியோ லுயிஸ் சாண்டோஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை கண்டுகளித்து வருகின்றனர்.
அதேபோல, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.






