ஜனாதிபதி இன்று கேரளா வருகை: சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார்


ஜனாதிபதி இன்று கேரளா வருகை: சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார்
x
தினத்தந்தி 21 Oct 2025 5:02 AM IST (Updated: 21 Oct 2025 6:52 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலையில் இன்றும், நாளையும் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான 22-ந்தேதி(நாளை) ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி அவர் 21-ந்தேதி(இன்று) கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வருகை தருகிறார். இன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் நாளை காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார்.

அங்கிருந்து கார் மூலம் பம்பை வரும் அவர் இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னிதானத்தில் ஓய்வெடுக்கிறார். பின்னர் வாகனம் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.

பின்னர் வர்க்கலாவில் நாராயண குரு ஆசிரமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார். தொடர்ந்து 24-ந் தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதையொட்டி வருகிற 21, 22-ந்தேதிகளில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

1 More update

Next Story