நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு புதிய தீர்மானங்களுக்கான ஒரு வாய்ப்பு என்று திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
2024-ம் ஆண்டின் கடைசி நாளுக்கு விடை கொடுத்து, 2026 புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பல்வேறு நாடுகளில் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்தியாவில் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. புத்தாண்டை வரவேற்பதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;-
“புத்தாண்டின் மகிழ்ச்சியான தருணத்தில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும், நேர்மறையான மாற்றத்தையும் குறிக்கிறது.
இது சுய பிரதிபலிப்பு மற்றும் புதிய தீர்மானங்களுக்கான ஒரு வாய்ப்பாகும். இந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துவோம்.
2026-ம் ஆண்டு நமது வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வந்து, வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க புதிய ஆற்றலை புகுத்தட்டும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






