மம்தா அரசின் பல்கலை.வேந்தர் நியமன மசோதா: ஜனாதிபதி நிராகரிப்பு

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் கவர்னருக்கு பதிலாக முதல்-மந்திரியை நியமிக்கும் மம்தா அரசின் மசோதாக்களை ஜனாதிபதி நிராகரித்தார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தொடர்ந்து 3-வது தடவையாக முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அங்குள்ள மாநில அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் கவர்னர்தான் வேந்தர் பொறுப்பில் இருந்து வருகிறார். முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மேற்கு வங்காள மாநில கவர்னராக இருந்தபோது, பல்கலைக்கழகங்களை நிர்வகிப்பது தொடர்பாக அவருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் நிலவியது.
எனவே, கவர்னரின் வேந்தர் பொறுப்பை பறிப்பதற்காகவும், அப்பொறுப்பில் முதல்-மந்திரியை நியமிப்பதற்காகவும், கடந்த 2022-ம் ஆண்டு, மேற்கு வங்காள மாநில அரசு, சட்டசபையில் 3 மசோதாக்களை நிறைவேற்றியது. மேற்கு வங்காள பல்கலைக்கழகங்கள் சட்ட திருத்த மசோதா-2022, அலியா பல்கலைக்கழக திருத்த மசோதா-2022, மேற்கு வங்காள சுகாதார அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா-2022 என்ற 3 மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், அம்மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கிடையே, ஜெகதீப் தன்கர் துணை ஜனாதிபதி ஆகிவிட்டதால், கவர்னர் பதவியில் சி.வி.ஆனந்தபோஸ் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 3 மசோதாக்களையும் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய அரசு மட்டத்தில் கலந்து ஆலோசித்தார்.இறுதியாக, 3 மசோதாக்களையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்துள்ளார். இத்தகவலை மேற்கு வங்காள மாநில கவர்னர் மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-மேற்கு வங்காள மாநில அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் கவர்னருக்கு பதிலாக முதல்-மந்திரியை நியமிக்கும் மசோதாக்களுக்கு ஜனாதிபதி அனுமதி மறுத்துள்ளார்.எனவே, ஏற்கனவே இருந்த சட்டங்கள் தொடர்ந்து அமலில் இருக்கும். அதன்படி, கவர்னர்தான் பல்கலைக்கழக வேந்தராக நீடிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.






