ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு


ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு
x

போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் கான்கிரீட்டில் சிக்கிய ஹெலிகாப்டரை தள்ளி சக்கரங்களை விடுவித்தனர்.

பத்தனம்திட்டா,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று மாலை கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவரை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்-அமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து சாலை மார்க்கமாக கவர்னர் மாளிகைக்கு சென்ற திரவுபதி முர்மு இரவில் அங்கு ஓய்வெடுத்தார். அதன்பின்னர், சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டார். மோசமான வானிலை காரணமாக நிலக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்க வேண்டிய ஹெலிகாப்டர், பிரமாடம் என்ற இடத்தில் தற்காலிகமாக தயார் செய்யப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

கடைசி நேரத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம் மாற்றப்பட்டதால் பிரமாடத்தில் அவசர அவசரமாக ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளம் போடப்பட்டது. இதனால் ஹெலிகாப்டரின் சக்கரங்கள் அந்த கான்கிரீட் தளத்தில் புதைந்தன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்து பம்பை கணபதி கோவிலுக்கு கார் மூலம் ஜனாதிபதி புறப்பட்டுச் சென்றார்.

அதன் பின்னர் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் கான்கிரீட்டில் சிக்கிய ஹெலிகாப்டரை தள்ளி சக்கரங்களை விடுவித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "அவசர அவசரமாக கான்கிரீட் போடப்பட்டதால், அது முழுமையாக தயாராகவில்லை. இதனால் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது, அதன் எடையைத் தாங்க முடியாமல், ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட்டில் புதைந்தன" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கார் மூலம் பம்பை சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கிருந்து இருமுடி கட்டி சன்னிதானத்திற்கு சிறப்பு வாகனத்தில் சென்றார். இதைத்தொடர்ந்து 18-ம் படி ஏறி சபரிமலை ஐயப்பனை ஜனாதிபதி தரிசனம் செய்தார். ஜனாதிபதி வருகை காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

1 More update

Next Story