தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே ஆலோசனை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டெல்லியில் இன்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி,
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்களுக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி டெல்லியில் உள்ள இந்திரா பவனில் மாலை 4 மணிக்கு கூட்டம் தொடங்கியது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியில் சிலர் குரல் எழுப்பிய நிலையிலும், ஜனநாயகன் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையிலும் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என்பதால், கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






