திருவள்ளுவர் தினம்: புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் மூடல்

தொடர் விடுமுறையுடன் புதுச்சேரி மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை (வியாழன் முதல் ஞாயிறு வரை) 4 நாட்கள் தொடர் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து, போகியை பண்டிகையையொட்டி புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் 14-ந்தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 31-ந்தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 5 நாட்கள் தொடர் விடுமுறையுடன் புதுச்சேரி மக்கள் பொங்கல் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான திருவள்ளுவர் தினத்தையொட்டி, 16-ந்தேதி(நாளை) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






