திருப்பதி லட்டு விவகாரம்... ஆந்திர அரசியலில் முற்றும் மோதல்


திருப்பதி லட்டு விவகாரம்... ஆந்திர அரசியலில் முற்றும் மோதல்
x
தினத்தந்தி 22 Sep 2024 11:46 AM GMT (Updated: 22 Sep 2024 12:53 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நிர்வாக விவகாரங்களில் ஆந்திர பிரதேச அரசின் பங்கு சிறிய அளவிலேயே உள்ளது என்று கடிதத்தில் ஜெகன் மோகன் ரெட்டி குறிப்பிட்டு இருக்கிறார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் கலப்படம் நடந்துள்ளது என ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். ஆய்வக அறிக்கையில் உள்ள தகவலை சுட்டிக்காட்டி முந்தின ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசாங்கம் திருப்பதி லட்டிலும் முறைகேடு செய்திருப்பதாக, விமர்சனம் செய்துள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில், பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார். அதில், சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளார். அந்த கடிதத்தில், அரசியல் உள்நோக்கம் கொண்ட அறிக்கைகள் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதுடன், திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் புனித தன்மையை களங்கப்படுத்தி உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இந்து பக்தர்களை கடவுள் வெங்கடேஸ்வரா வைத்திருக்கிறார். இந்த மென்மையான சூழ்நிலையை கவனத்துடன் கையாளவில்லை எனில், இந்த பொய்கள் பரவலாக கடுந்துயரை ஏற்படுத்தி, பல்வேறு நிலைகளிலும் தீர்க்க முடியாக விளைவுகளை ஏற்படுத்தி விடும் என குறிப்பிட்டு உள்ளார்.

உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியதுடன், பக்தர்களின் நம்பிக்கை மற்றும் உண்மையை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். அவர் அந்த கடிதத்தில், உண்மையில் அரசியல் உள்நோக்குடன் ஒரு பொய்யானது பரப்பப்படுகிறது. இந்த பொய்யான பிரசாரம், உலகம் முழுவதுமுள்ள இந்து பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் சக்தி படைத்தது. திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் தன்னிச்சையாக செயல்பட கூடிய அதிகாரம் பெற்றது.

பல்வேறு பின்னணிகளுடன் கூடிய வலுவான பிரபல பக்தர்களை உள்ளடக்கியது. மற்ற உறுப்பினர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் பிற மாநில முதல்-மந்திரிகள் சேர்ந்து பரிந்துரைத்தவர்களாக இருப்பார்கள் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வாரியத்தில் உள்ள உறுப்பினர்களில் சிலர் பா.ஜ.க.வுடனும் தொடர்பில் உள்ளவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. வாரியத்தின் நிர்வாகிகளே, திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய நிர்வாகம் முழுவதும் மேலாண்மை செய்ய கூடிய முழு அதிகாரம் படைத்தவர்கள் ஆவர். திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நிர்வாக விவகாரங்களில் ஆந்திர பிரதேச அரசின் பங்கு சிறிய அளவிலேயே உள்ளது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

நெய் பயன்பாடு பற்றி குறிப்பிட்ட அவர், கோவிலுக்குள் நெய் நுழைவதற்கு முன் விரிவான இணக்கத்திற்குரிய பரிசோதனைகள் நடத்தப்பட்டே அனுமதிக்கப்படுகின்றன. கடுமையான இ-டெண்டர் முறை, என்.ஏ.பி.எல். ஆய்வக பரிசோதனைகள், பலகட்ட பரிசோதனைகள் ஆகியவை எந்தவொரு பொருள் பயன்படுத்துவதற்கு முன்பும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கு முந்தின தெலுங்கு தேச கட்சியின் ஆட்சியில் கூட இந்நடைமுறை இருந்தது. குறைவான தரம் கொண்டது என கடந்த காலத்தில் கண்டறியப்பட்ட நெய்யானது, நிராகரிக்கப்பட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.

உண்மையில் பொறுப்புள்ள முதல்-மந்திரியானவர், இந்த கடுமையான பரிசோதனைகள் பற்றி பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும். மக்களின் சவுகரியத்திற்காக மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் புனித தன்மைக்காக இவற்றை மேற்கொள்ள வேண்டும். சந்திரபாபு நாயுடு நடந்து கொண்ட விதம் முற்றிலும் சமூக பொறுப்பற்ற விதத்தில் உள்ளது என அதில் கடுமையாக குறிப்பிட்டு உள்ளார்.

லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் அதிகளவில் கலப்படம் நடந்திருப்பதாக வெளியான ஆய்வக அறிக்கை மற்றும் அது தொடர்பான விவாதம் ஆந்திர அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியிடையே கருத்து மோதல் வலுத்துள்ளது.


Next Story