வி.பி.-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிர்ப்பு; நாடாளுமன்றத்தில் நள்ளிரவு முதல் எதிர்க்கட்சியினர் 12 மணிநேர தர்ணா போராட்டம்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது என மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த திட்டத்தின் பெயரில் இருந்து செயலாக்கம் வரை பல மாற்றங்களை அமல்படுத்தும் வகையில் ஒரு மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி, இந்த திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டு 'விக்சித் பாரத் ரோஜ்கர் அஜீவிகா மிஷன்' (கிராமின்) என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதி அளிப்பு திட்டம் என்ற பொருளில் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் இது 'வி.பி.-ஜி ராம் ஜி' திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புதிய திட்டத்தில் சில பலன்களும் இருக்கிறது. வேலை வழங்கும் நாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்துக்காக மத்திய அரசாங்கமே முழு தொகையையும் வழங்கிய நிலையில், மத்திய அரசாங்கம் 60 சதவீதமும், மாநில அரசுகள் 40 சதவீதமும் செலவழிக்க வேண்டும்.
இந்நிலையில், வி.பி.-ஜி ராம் ஜி மசோதா நாடாளுமன்ற மாநிங்களவையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று நிறைவேறியது. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சி.பி.ஐ., ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நாடாளுமன்றத்தில் அமர்ந்து, கோஷங்களை எழுப்பியும், எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும், மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறும்போது, மக்களவையில் எதிர்க்கட்சியினர் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. அவையில் அவர்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் நடந்து கொண்ட விதம் ஏற்று கொள்ள முடியாதது என்று கூறினார்.






