'இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் முருகன் மாநாடு நடத்துவோம்' - தமிழிசை சவுந்தரராஜன்


இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் முருகன் மாநாடு நடத்துவோம் - தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 7 Jun 2025 5:44 PM IST (Updated: 7 Jun 2025 6:04 PM IST)
t-max-icont-min-icon

ஆன்மிகம் தழைக்க வேண்டும் என்பதற்காக முருகன் மாநாட்டை நடத்துவதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் வரும் 22-ந்தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், மத்திய மந்திரிகள், பா.ஜ.க. தேசிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். அதே சமயம், இது சங்கிகள் மாநாடு என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இது குறித்து பேசுகையில், "ஏற்கனவே நம்முடைய இந்து அறநிலையத்துறை சார்பாக

முருகன் மாநாடு நடத்தப்பட்டது. இவர்கள் இப்போது நடத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது? வேண்டுமென்றால் குஜராத், உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் முருகன் மாநாட்டை நடத்தலாமே?" என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், மதுரையில் பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நாங்கள் பயபக்தியோடு முருகன் மாநாடு நடத்த இருக்கிறோம். ஆனால் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பயத்துடன் முருகன் மாநாட்டை பார்க்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், ஆன்மிகம் தழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

நாங்கள் எப்போதுமே முருகனை வணங்குபவர்கள்தான். ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறுபவர்கள் முருகன் மாநாடு நடத்தியதுதான் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே திருமாவளவன் கவலைப்பட வேண்டாம். எங்களிடம் இருப்பது மதவாதம் கிடையாது, மனிதத்துவம்.

2026-ல் எங்களுக்கு வெற்றி வரும், அதன்பிறகு அவர்கள் ஓய்வு எடுக்கலாம். முருகன் மாநாட்டை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நடத்ததலாம். தமிழ்நாட்டில் முதலில் நடத்திவிட்டு பின்னர் மற்ற மாநிலங்களில் நடத்துவோம்."

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

1 More update

Next Story