சுட்டுக்கொல்லப்பட்ட இணைய தொடர் இயக்குனர்; சிறுவர்களை சிறைபிடித்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்


சுட்டுக்கொல்லப்பட்ட இணைய தொடர் இயக்குனர்; சிறுவர்களை சிறைபிடித்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்
x

ரோகித் ஆர்யா சிறுவர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்தது ஏன்? என்பது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

மும்பையில் சிறுவர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்த ரோகித் ஆர்யா போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரோகித் ஆர்யா புனேயை சேர்ந்தவர். இணைய தொடர் (வெப் சீரிஸ்) இயக்குனர். இவர் திரைப்படம் எடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்து உள்ளார். சிவசேனாவை சேர்ந்த தீபக் கேசர்கர் கல்வித்துறை மந்திரியாக இருந்தபோது ரோகித் ஆர்யா கல்வித்துறை தொடர்பான ஒரு டெண்டரை எடுத்து உள்ளார்.மாநில அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் `மாஜி சாலா, சுந்தர் சாலா' (எனது பள்ளி, அழகான பள்ளி) திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தை உருவாக்கியது ரோகித் ஆர்யா என கூறப்படுகிறது. ஆனால் அரசிடம் இருந்து அவருக்கு எந்த அங்கீகாரம் மற்றும் ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே அவர் இந்த விவகாரத்தில் நீதி கேட்டு பல முறை புனேயில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளார். கல்வித்துறை மந்திரி தீபக் கேசர்கர் வீட்டின் முன்பும் போராட்டம் நடத்தி உள்ளார். ஒரு முறை ஒரு மாதம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். கல்வித்துறை மந்திரியாக தீபக் கேசர்கர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். எனினும் அதன்பிறகும் அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த அவர், `நான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு தீபக் கேசர்கர், அவரது தனி செயலாளர் மங்கேஷ் ஷிண்டே, முன்னாள் கல்வித்துறை கமிஷனர் சுரஜ் மந்தாரே, துஷார் மகாஜான், சமீர் சாவந்த் ஆகியோர் தான் காரணம்' என கூறியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று கல்வித்துறை தொடர்பான தனது பிரச்சினை குறித்து பேச அவர் சிறுவர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்து இருந்ததாக கருதப்படுகிறது. ஆனால் சிறுவர்களின் பாதுகாப்பை கருதி அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1 More update

Next Story