இன்று சர்வதேச வன உயிரின தினம்


இன்று சர்வதேச வன உயிரின தினம்
x

இன்று சர்வதேச வன உயிரின தினம் கொண்டாடப்படுகிறது.

ஈரோடு

பவானிசாகர்

உலகில் வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிக்கவும் அவற்றை பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3-ந் தேதி சர்வதேச வனவிலங்கு தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் மனித வாழ்க்கை முற்றிலும் வனப்பகுதிக்குள் கலந்து உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் வனப்பகுதிக்குள் ஆடு, மாடுகள் மேய்ப்பது, சீமார்புல் சேகரித்து விற்பனை செய்வது உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவது மட்டுமின்றி வனப்பகுதியை காப்பதில் இவர்கள் ஒரு அங்கமாக விளங்குகின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது.

வனப்பகுதியில் வசித்து வரும் புலி, சிறுத்தை மற்றும் யானைகள் போன்ற வனவிலங்குகளுக்கு ஒரு காலத்தில் அவைகளை வேட்டையாடும் கொள்ளையர்கள் மூலமே ஆபத்து ஏற்பட்டு வந்தது. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்த பின்பு வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்காலங்களில் வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதில் பெரும்பங்கு வகிப்பது வாகனங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. வனச்சாலையை கடக்கும் வனவிலங்குகள், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மோதி இறந்துவிடுவது வேதனை தரக்கூடிய சம்பவங்களாக உள்ளது.

குறிப்பாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் இருந்து தொடங்கி நமது மாநில எல்லை வரை இடையே உள்ள 28 கிலோமீட்டர் தூர வனச்சாலையில் வாகனங்கள் மோதி சிறுத்தை, யானை, குரங்கு, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மனித விலங்குகள் மோதல் காரணமாக யானைகள் அதிகமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. எனவே வனத்துறையினர் வனப்பகுதியையொட்டி பெரிய அகழிகள் மற்றும் மின்சார வேலிகள் அமைத்து விவசாய நிலத்துக்குள் வனவிலங்குகள் புகுந்துவிடாமல் தடுக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

தற்போது தமிழ்நாட்டில் 28.7 சதவீதம் மட்டுமே வனப்பகுதி உள்ளது. இதை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 33 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார். இதற்காக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 265 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. பொதுவாக வனப்பகுதி வளமாக இருந்தால் மட்டுமே உலகத்தில் தட்பவெப்ப நிலை சீராக இருக்கும். எனவே தமிழக அரசின் வனப்பகுதி அதிகரிக்கும் திட்டம் தற்போது மிகவும் அவசியம் என்பதில் ஐயமில்லை.

1 More update

Next Story