தடை செய்யப்பட்ட 3 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல்

தஞ்சையில் தடை செய்யப்பட்ட 3 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பைகளை பதுக்கி வைக்கப்பட்டு இருந்த குடோனுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தஞ்சாவூர்;
தஞ்சையில் தடை செய்யப்பட்ட 3 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பைகளை பதுக்கி வைக்கப்பட்டு இருந்த குடோனுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
தமிழக அரசு சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கும் வகையிலும் எளிதில் மக்காத ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்தக்கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தஞ்சை மாநகரில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மேற்பார்வையில், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் வணிக நிறுவனங்களில் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.
3 டன் பாலித்தீன் பைகள்
இந்நிலையில் நேற்று தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் ஒரு குடோனில் பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி தலைமையில் அதிகாரிகள் அந்த குடோனுக்கு சென்று சோதனை செய்தனர்.அப்போது அந்த குடோனில் வைக்கப்பட்டிருந்த 3 டன் எடையுள்ள பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் குடோனை பூட்டி சீல் வைத்தனர். மேலும் குடோன் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
சீல் வைக்கப்படும்
இதுகுறித்து மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி கூறுகையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணி பைகள், காகித பைகள், சணல் பைகள், கண்ணாடி குவளைகள், உலோகத்தால் ஆன குவளைகள், பாக்கு மட்டை தட்டு, மர ஸ்பூன், போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்துமாறும் பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்.வணிகர்கள் பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதித்தும், பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சீல் வைக்கப்படும்.என்றார்.






