02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...


02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
x
தினத்தந்தி 2 Jan 2025 8:32 AM IST (Updated: 2 Jan 2025 9:49 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 2 Jan 2025 4:25 PM IST

    தமிழக வீராங்கனைகள் 3 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு

    தமிழக பாரா பேட்மிண்டன் வீராங்கனைகள் 3 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, துளசிமதி முருகேசன், நித்ய ஸ்ரீ சுமதி சிவன், மணீஷா ராமதாஸ் ஆகிய 3 வீராங்கனைகளுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

  • 2 Jan 2025 4:22 PM IST

    அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

    தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் போனஸ் அறிவித்து உள்ளார். பொங்கல் பரிசு வழங்குவதற்காக, ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

  • 2 Jan 2025 4:02 PM IST

    பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி அமிர்தசரஸ் பொற்கோவிலில் சாமி தரிசனம்

    பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி இன்று சென்றார். சாமி தரிசனம் முடித்து விட்டு அவர் நிருபர்களிடம் கூறும்போது, புது வருட தொடக்கத்தில் பொற்கோவிலுக்கு வருகை தரும் சந்தர்ப்பம் கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    பார்டர் 2 படத்தில் தில்ஜித் தோசன் உடன் பணியாற்ற என்னுடைய மகன் ஆஹான் ஷெட்டிக்கு வாய்ப்பு கிடைத்ததற்காக நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறியுள்ளார்.

  • 2 Jan 2025 2:40 PM IST

    2024-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் அறிவிப்பு

    2024-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேசுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று ஹர்மன்பிரீத் (ஹாக்கி), மனு பாக்கர் (துப்பாக்கி சுடுதல் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

  • 2 Jan 2025 2:08 PM IST

    பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு: எஸ்.வி.சேகருக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்டு

    பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்தை பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

    சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்திருந்தநிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்த ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன், சிறை தண்டனையை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார்.

  • 2 Jan 2025 1:52 PM IST

    மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு பெண் அதிகாரிகள் விசாரணை

    அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு பெண் அதிகாரிகள் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய புலனாய்வு குழுவிடம், கோட்டூர்புரம் போலீசார் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்த நிலையில், இன்று சம்பவம் நடந்த இடத்தில் பெண் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 2 Jan 2025 1:49 PM IST

    "பா.ம.க. இளைஞரணித் தலைவர் முகுந்தன் தான்.." - ராமதாஸ் திட்டவட்டம்


     பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவர் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் முகுந்தன் நீடிக்கிறாரா என்ற பேச்சுக்கே இடமில்லை. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. பொதுக்குழு முடிந்த மறுநாளே அவருக்கு நியமன கடிதமும் டைப் அடித்துக் கொடுத்து விட்டேன். முகுந்தனை இளைஞர் அணித் தலைவராக நியமித்ததில் எவ்வித மாற்றமுமில்லை” என்று ராமதாஸ் கூறினார். 


  • 2 Jan 2025 1:17 PM IST

    ஏற்றத்தாழ்வுகளை நீக்க உருவாக்கப்பட்டது தி.மு.க. - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சென்னை சைதாப்பேட்டையில் மகளிர் திறன் மேம்பாடு மையத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாஅலின், “சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கவே தி.மு.க. உருவாக்கப்பட்டது. பெண்கள் கல்வி என்பதை தாண்டி அவர்களின் உயர்கல்வியை உறுதிசெய்ய திட்டங்கள் தீட்டுகிறோம். பெண்களுக்கு அதிகாரம் என்ற மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது” என்று அவர் கூறினார். 

1 More update

Next Story