வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் சின்மய் கிருஷ்ண தாசுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு


வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் சின்மய் கிருஷ்ண தாசுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு
x

தேசத்துரோக வழக்கு என்பதால் ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

டாக்கா:

வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு, சிறுபான்மை இந்துக்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடக்கின்றன. இது இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நவம்பர் 25-ம் தேதி இந்து அமைப்பின் தலைவரும், இஸ்கான் முன்னாள் துறவியுமான சின்மய் கிருஷ்ண தாஸ் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மறுநாள் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனால் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கோர்ட்டுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், சின்மய் கிருஷ்ண தாசின் ஜாமீன் மனு மீதான விசாரணை சட்டோகிராம் பெருநகர அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேசத்துரோக வழக்கு என்பதால் ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி சைபுல் இஸ்லாம், குற்றம்சாட்டப்பட்ட சாமியார் சின்மய் கிருஷ்ண தாசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக சின்மய் கிருஷ்ண தாசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

1 More update

Next Story