தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 3 பேருக்கு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இந்த ஆண்டு தற்போது வரை 40 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 3 பேருக்கு முழுமையான மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர். இது குறித்து மருத்துவமனை டீன் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ச்சியாக 3 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14-ம் தேதி சீதாலட்சுமி என்பவருக்கும், 16-ம் தேதி ஆஸ்டின் என்பவருக்கும், 17-ம் தேதி எக்ஸ்பிர்த் என்பவருக்கும் இடது பக்க மொத்த முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. தற்போது மூன்று பேரும் நலமுடன் உள்ளனர்.
இந்த மூன்று மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் தோராயமாக ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இதுவரை முழு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் 159, முழு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் 231 என மொத்தம் 390 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தற்போது வரை 40 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அதுபோல மொத்தம் 40 நுண்துளை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், துறைத்தலைவர் பாவலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சிகிச்சை பெற்றவர்கள், மருத்துவமனை முதல்வர், துணை முதல்வர் உறைவிட மருத்துவர், மயக்க மருந்துத் துறை தலைவர் மற்றும் அவரது குழு மற்றும் அனைத்து செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.






