ஓமலூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட 6,839 மதுபாட்டில்கள் அழிப்பு

போலீசார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட 6,839 மதுபாட்டில்கள் உடைத்து அழிக்கப்பட்டன.
ஓமலூர்,
ஓமலூரில் உள்ள இரும்பாலை மதுவிலக்கு பிரிவு, சூரமங்கலம் மற்றும் மேட்டூரில் உள்ள மதுவிலக்கு பிரிவு போலீசார் தொடர்ந்து மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மதுவிற்பனையை தடுத்து பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் ஓமலூர் மதுவிலக்கு போலீஸ் நிலையம், சூரமங்கலம் மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தன.
அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளாக பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 6 ஆயிரத்து 839 மதுபாட்டில்களை உடனடியாக கொட்டி அழிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு மகாவிஷ்ணு, டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியில் உள்ள ஏரியில் 6,839 மதுபாட்டில்களை தரையில் கொட்டினர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் அதன் மீது ஏற்றி உடைத்து அழித்தனர்.
அப்போது மதுபாட்டில்கள் வெடித்து சிதறி அந்த இடமே மது ஆறாக ஓடியது. தொடர்ந்து அழிக்கப்பட்ட மதுபாட்டில்களின் கண்ணாடிகள் அருகே பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.






