மேம்பால கேபிளை பிடித்து இறங்க முயற்சி.. அந்தரத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர்

இதுதொடர்பான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆவடி,
சென்னை ஆவடி அருகே நெமிலிச்சேரி சந்திப்பில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் நீலகொண்டமாஜி என்பவர் இன்டர்நெட் கேபிள் மூலம் சாலையின் கீழே இறங்க முயற்சி செய்தார். இதனை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் போலீசார் அவரை எச்சரித்தனர். இருந்த போதிலும் எதையும் காதில் வாங்காத அவர், இன்டர்நெட் கேபிள் மூலம் சாலையில் சினிமா பாணியில் இறங்க முயற்சி செய்தார்.
அப்போது திடீரென கேபிள் ஒயர் அறுந்து விட்டது. ஒற்றை ஒயரை பிடித்தபடி 60 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார். நல்லவேலையாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை அருகே இருந்த போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். சுமார் 60 அடி மேம்பாலத்தின் மீது இருந்து சாகசம் செய்த வாலிபர் மன நலம் பாதிக்கப்பட்டவரா அல்லது சாகசம் செய்ய குதித்தாரா அல்லது குற்றச் செயலில் ஈடுபட்டு தப்பிக்க மேம்பாலத்தின் மீது இருந்து குதித்தாரா என விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.






